நடப்பு 2019-20 நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டு காலமாக, பொருளாதார சரிவு, பொருளாதார மந்த நிலை, பல துறைகளில் விற்பனை சரிவு, உற்பத்தி சரிவு மற்றும் வேலை இழப்புகள் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றது. இதனால் தனிநபரின் வாங்கும் திறன் என்பது பெரும் அளவில் குறைந்துள்ளது. நடப்பு 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக சரிந்தது. இதை அடுத்து, இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் முதல் 4.7 சதவீதத்துக்குள் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்களின் கணிப்புகள் வெளியாகிய நிலையில், தற்போது இரண்டாம் காலாண்டின் ஜி.டி.பி குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு 2019-20 நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்துள்ளது. இதே போல் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியும் 5.8 சதவிகிதம் குறைந்துள்ளது.
பொருளாதார நிபுணர்கள் கூறியவாறு, கடந்த முதல் காலாண்டில் ஏற்றத்தில் இருந்த சில துறைகளும், செப்டம்பர் (இரண்டாம்) காலாண்டில் சரிவில் உள்ளது. குறிப்பாக எரிபொருள், ஏற்றுமதி, இறக்குமதி, நிலக்கரி, ஆட்டோமொபைல் துறை, ஸ்டீல் துறை என பல துறைகள், கடந்த ஜூன் காலாண்டில் இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. இது தவிர, வேகமாக நுகரக்கூடிய நுகர்வோர் பொருட்களின் நுகர்வும் குறைந்துள்ளது. அதே சமயம், பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சில்லறை பணவீக்கம் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மேலும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அரசின் இலக்கை தாண்டியும், கடந்த ஏப்ரல் - அக்டோபர் வரையிலான நடப்பு கணக்கு பற்றாக்குறை 102.4% அதிகரித்துள்ளது. இந்த விகிதமானது முழு ஆண்டுக்குமான இலக்கினை தற்போதே கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 7.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்பு 6.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. எனினும் பட்ஜெட்டில் இதன் இலக்கு 7.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.